என் பாதையின் பதிவுகள்-1


என் காதிலே காதல் கானம் நுழைந்து கொண்டிருந்தது பக்கத்துக் கடையின் இசைப் பெட்டியில் இருந்து. நானும் கேட்டு ரசித்த படி பேருந்து நிருத்தத்தில் உட்கார்ந்திருந்தேன். 
அருகில் நான்கு நடுத்தர வயதுடைய பெண்களும், கொஞ்சம் வயது முதிர்ந்த ஒரு முதியவரும் அமர்ந்திருந்தார்கள். தெருவில் மக்கள் கூட்டத்திற்கும் பஞ்சம் இல்லை. நிருத்தத்திற்கு பின்னால் ஒரு புது மணத்தம்பதிகள் சிரித்த படி உரையாடிக் கொண்டிருந்தனர். அதையெல்லாம் கண்டும் காணாமல் சாலையில் செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

மாலை நேரம் என்பதால் அகலமான சாலையிலும் அலை மோதிக் கொண்டிருந்தது வாகனக் கூட்டம். அப்போது சற்று மன நிலை சரியில்லாத வாலிபர் நடை மேடையின் மேல் படுத்திருந்தார். ஊர்ந்து செல்லும் வாகனங்களின் சத்தங்களுக்கு இடையில் திடீரென ஒரு அலறல் சத்தம். சடாரென திரும்பிப் பார்த்தேன். 
நடைமேடையில் படுத்திருந்த வாலிபரின் அருகில் இருந்த சுருட்டி வைக்கப் பட்டிருந்த எஞ்சிய தனது உணவு இலையை தெரு நாயின் வாயில் இருந்து காப்பாற்றப் போராடிக் கொண்டிருந்தார். இன்னும் சிறிது நேரத்தில் அந்த நாய் வாலிபரையும் தாக்க முற்பட்டது. 
கௌரவம் மிக்க மனிதர்கள் கண்டு கேலி செய்து சென்றனர். 
என்னைப் போல் பயம் கொண்டவர்கள் பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டே நின்றனர். 
ஆனால்...
எந்த பயமும் பரிதாபமும் இல்லாமல் ஒருவன் வந்தான். கீழே கிடந்த இரு கல்லை எடுத்து ஒன்றை  குறி பார்த்து அடித்தான் அந்த நாயின் நெற்றியில். 
கத்திக் கொண்டே ஓடியது வந்த வழி தெரியாமல். 
உடனே பயத்தில் ஓடி வந்து தூக்கினாள் தன் ஒன்பது வயது மகனை அவன் கையில் இருந்த மற்றொரு கல்லை தட்டிய படி. ஒன்பது வயது குழந்தைக்கு உள்ள அக்கரையும், தைரியமும் நம்மில் எத்தனை பேருக்கு உண்டு…?

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்